வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024.07.17 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் எனும் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாடசாலை முதல்வர் திருவாளர் எஸ்.மகேந்திரராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. பிரதீபா காயத்திரி கஜபதி அவர்கள் பிரதம விருந்தினராகவும், பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன், கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.பா.அபிராமி அவர்களும் கிளிநொச்சி தெற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) திரு.எஸ்.வசந்தகுமார், சமய பாட ஆசிரிய ஆலோசகர் திரு.ல.நிகேதன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் என்போருடன் பண்பாட்டலுவல்கள் அலகின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழாவில் மாணவர்களது பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினர் மற்றும் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளரினால் மாணவர்களுக்கான ஆடிப்பிறப்பு பற்றிய சிறப்புரை ஆற்றப்பட்டது. கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக 100 எவர்சில்வர் கோப்பைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை பரிமாறப்பட்டதுடன் பிற்பகல் 2.30 மணிக்கு விழாவானது இனிதே நிறைவுபெற்றது.