Print

வடக்கு மாகாண தமிழ் சிங்கள புதுவருட விழா – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் வேலணைப் பிரதேச செயலக ஏற்பாட்டில் வடக்கு மாகாண தமிழ் சிங்கள புதுவருட விழாவானது 2023.04.21 (வெள்ளிக்கிழமை) பி.ப 2.00 மணியளவில் யாஃ வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வேலணைப் பிரதேச செயலாளர் திரு. கயிலாயபிள்ளை சிவகரன் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமாகியது.

இந்நிகழ்வினை வேலணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தியதுடன் பிரதம விருந்தினராக தீவக வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.திருஞானசம்பந்தபிள்ளை ஞானசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணாளினி விஜயரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையுரையினைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பலூன் ஊதி உடைத்தல்(ஆண் பெண் 10 வயதிற்குட்பட்டோர்), சாக்கோட்டம்(ஆண் பெண் 11 – 15 வயதிற்குட்பட்டோர்), முட்டி உடைத்தல்(ஆண் பெண்) ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து வேலணை கிழக்கு நேதாஜி கலைமன்றத்தினரின் குறத்தி நடன நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்தும் சமநிலை ஓட்டம்(ஆண் பெண் 11 – 15 வயதிற்குட்பட்டோர்), இனிப்பு ஊதி எடுத்தல்(ஆண் பெண் 8 – 10 வயதிற்குட்பட்டோர்) விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும் சரவணை திருவள்ளுவர் கலாமன்றத்தினரின் வசந்தன் கும்மி எனும் சிறப்பு நிகழ்வு இடம் பெற்றதை தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.வி.சுகுணாளினி அவர்களது சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்றது. தொடர்ந்தும் போத்தலில் நீர் நிரப்பல்(ஆண் பெண் 8 – 10 வயதிற்குட்பட்டோர்), பணிஸ் உண்ணல்(ஆண் பெண் 13 – 16 வயதிற்குட்பட்டோர்), யானைக்கு கண்வைத்தல்(பொது 16 வயதிற்குட்பட்டோர்), வேக நடை(ஆண் பெண் 60 வயதிற்கு மேற்பட்டோர்)போன்ற விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.

தொடர்ந்து வேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் ஜிம்னாஸ்ரிக் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண், பெண் இருபாலருக்குமான கயிறு இழுத்தல் போட்டி, அலுவலர்களுக்கான சங்கீதக்கதிரைப் போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன.

மேலும் வேலணை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஞானசுந்தரன் அவர்களது பிரதம விருந்தினர் உரை இடம் பெற்றதுடன், வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம் பெற்றது.

வேலணை  பிரதேச செயலக உத்தியோகத்தர்களது புரண ஒத்துழைப்பும்,  வேலணைப் பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடகான ஒத்துழைப்பும் வடமாகாண தமிழ், சிங்கள புத்தாண்டு சிறப்புற நடைபெற உதவியமை என குறிப்பிடலாம்.

இறுதியாக வேலணைப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ம.மேர்சிசுஜந்தினி அவர்களது நன்றி உரையினைத் தொடர்ந்து நிகழ்வானது பி.ப 5.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.  

 

Hits: 9108