Print

முப்பெருங்கூடல் – 2023

கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் 2023 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் மு.ப 09.00 மணி முதல் பி.ப 05.00 மணிவரை ”முப்பெருங்கூடல்” எனும் பெயரில் நூற் கண்காட்சியும் விற்பனையும், நாவலர் பெருமானுடைய வரலாற்று சித்திரக்காட்சியும், ”விழித்தெழு” எனும் விழிப்புணர்வு வீதி நாடக ஆற்றுகையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.எஸ்.சுரேந்திரன் அவர்களும், கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், பண்பாட்டலுவல்கள் திணைக்கள அலுவலர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சின் செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எம்.இராதாகிருஸ்ணன்  ஆகியோர் அன்றைய தினம் கால்கோள் விழா காரணமாக மதிய வேளையிலேயே வருகை தந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்ப நாளன்று கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களால் மங்கல விளக்கேற்றி, நாடா வெட்டப்பட்டு கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடுகளும், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் திணைக்கள நிதி உதவியுடன் பிரதேச செயலகங்களினால் வெளியிடப்பட்ட ஏராளமான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் யாழ் பல்கலைக்கழக கல்வி துறை சார்ந்தோர் எனப் பலரும் கலந்து இக்கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர்.

யாழ் கல்வி வலயப் பாடசாலைகளான யா/பெனடிக்ஸ் வித்தியாலயம், யா/பரியோவான் கல்லூரி, யா/மத்திய கல்லூரி, யா/இந்துக் கல்லூரி, யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யா/ இந்து மகளிர் கல்லூரி, யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் இரு நாட்களும் கண்காட்சியைப் பார்த்து பயனடைந்துள்ளனர். இம் மாணவர்களுக்கு போதை மற்றும் எதிர்காலம் தொடர்பான கருப்பொருளில் கூத்தாட்ட அவைக் குழாம் குழுவினரால்  ”விழித்தெழு” எனும் வீதி நாடகம் இரு நாட்களும் இரண்டு தடவைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களும், கருத்துப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்பட்டதுடன் முப்பெருங்கூடல் நிகழ்வும் பி.ப 5.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

 

Hits: 2220