Print

வட மாகாண எழுத்தாளர் அவை - 2022

கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாண எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் “வடமாகாண எழுத்தாளர் அவை” அங்குரார்ப்பண நிகழ்வு 07.12.2022 ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்றது.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடனும், அகவணக்கத்துடனும் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ரஜனி நரேந்திரா அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையினை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் வழங்கினார். எழுத்தாளர் அவைக்கான காப்பாளர்களாக திருமதி.மனோன்மணி சண்முகதாஸ், அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார், திரு.தி.வேல்நம்பி, திரு.ஐயாத்துரை சாந்தன், திரு.இ.இராஜேஸ்கண்ணன், அருட்கலாநிதி டேவிற் வின்சன் பற்றிக் மற்றும் திரு.நாகலிங்கம் தர்மராஜா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.  வடமாகாண எழுத்தாளர் அவை உருவாக்கம் மற்றும் அதன் நோக்கம் தொடர்பாகவும், எழுத்தாளர்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும் முனைவர்.திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் நோக்கவுரை ஆற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த எழுத்தாளர்களுடைய சுயஅறிமுகம் நடைபெற்றது. மருதங்கேணி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.செல்வசுகுணா சேனாதிராஜா  அவர்களால் மாதிரி யாப்பு வாசிக்கப்பட்டு எழுத்தாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடமாகாண எழுத்தாளர் அவை உருவாக்கம் தொடர்பாக நிர்வாகக்குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். வடமாகாண எழுத்தாளர் அவையின் தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த திரு.சி.நாகேந்திரராஜா அவர்களும், செயலாளராக யாழ் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்த திரு.ந.அனந்தராஜா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் சிறுவர் இலக்கியத் துறைக்கான உப குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஆசிரியர் திரு.ஸ்ரீகுமரன் அவர்களும், செயலாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.த.அஜந்தகுமார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் ஊக்குவிப்பு தொடர்பான எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டன.  இறுதியாக நெடுந்தீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.அ.சிவஞானசீலன் அவர்களால் நன்றியுரை கூறப்பட்டதுடன் கலந்துரையாடலானது நண்பகல் 12.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

 

 

 

 

Hits: 1695