Print

 

கற்பித்தல் மற்ற எல்லாத் தொழில்களையும் உருவாக்கும்.

“தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர்; கற்றறிந் தார்”

என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க ஏணியாய் ஏற்றிவிட்டு மற்றவர் உயர்ச்சியில் இன்புற்றுக்கொள்ளும் ஆத்மார்த்த பணியை ஆற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியப்பெருந்தகைகளை இவ் ஆசிரிய தின நன்நாளில் பாராட்டிப் போற்றுகின்றேன்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிநிலையில் தெய்வத்திற்கும் முதன்நிலையில் நோக்கப்படுபர்கள் ஆசிரியர்களே.

‘நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைபட்டிருக்கின்றேன். ஆனால் நான் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கின்றேன்’ என்கின்ற மாவீரன் நெப்போலியனின் பொன்மொழியானது எம் வாழ்விலும் பொய்யாகாது.

பண்டைய சமூகத்தில் சமயகுரவர்களே ஆசிரியர்களாக பணியாற்றினர். குருகுலக்கல்வியாய் ஆரம்பித்து பிரம்மச்சாரிய நிலையில் அனைத்தும் கற்று தெளிவுற்று கிரகஸ்த நிலையில் மேம்படுத்தப்பட்டது. மேலைநாட்டு பாரம்பரியத்தில் கிறிஸ்தவ பாதிரிமாரும், இந்துப்பாராம்பரியத்தில் இந்துமதத்துறவிகளும், பௌத்த மத பாரம்பரியத்தில் பிக்குகளும் ஆசிரியப்பணியாற்றினர். கல்வியானது சமயம் சார்ந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருந்ததுடன் துறவிகளாகவே பெரும்பாலும் ஆசிரியர்கள் இருந்தனர்.

‘உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் - கடையரே கல்லா தவர் ’ கல்வி கற்றவருக்கே சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு என்பர். இவ்வாறான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருந்துகொண்டு மாணவர்களின் நன்நடத்தை வளர்ச்சிக்கு உதவுகின்றனர். ஆசிரியரின் ஆளுமையைப் பொறுத்தே மாணவர்களின் ஆளுமையும் நடத்தைப்பாங்கும் அமைகின்றன.

சமய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த கல்வியானது 18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் தேசிய அரசுகளின் தோற்றத்துடன் அரசின் பொறுப்பிற்குட்பட்டு தேசிய கல்வி முறையைத் தோற்றுவித்தது. காலனித்துவச் செல்நெறியில் அவை எங்கும் பிரவாகிக்கத்தொடங்கியதன் விளைவுகள் இன்று பல மாற்றங்களுடன் பாடசாலை முறைமைக்குள் கல்வியின் பரப்பு அகல விரிந்துள்ளது.

புதிய 21 ஆம் நூற்றாண்டானது தகவல்மைய, அறிவுமைய நூற்றாண்டில் அதிலும் இன்றைய பேரிடர் சூழலில் நேருக்கு நேரான கல்வி முறையற்ற நிலையில் மாணவர்கள் தாமாக கற்கும் திறன்களை புகுத்துவதற்கான வகிபாகத்தை ஆசிரியர்கள் எடுத்துள்ளார்கள். பரீட்சையமற்ற தொழில்நுட்பமாயினும் பயிற்சிப்படுத்திக்கொண்டு மாணவர்களின் உயர்வுக்காய் அரும்பாடுபடுபவர்களாக எம் ஆசிரியர்கள் மிளிர்கின்றமை கண்கூடாகும். ஏகலைவன் கற்ற கல்விபோல் இன்று மாணவர்கள் மெய்நிகர் தொழிநுட்பம் ஊடாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதில் கிளியின் கழுத்துமட்டுமே தெரியவேண்டும் என்ற தன்மைக்குள் பிள்ளைகளை அவதானத்துடன் இருக்கச்செய்யவும் பாடங்களைப் புரிந்து கொள்வதற்குமான புதிய புதிய யூக்திகளை கையாண்டு அர்ப்பணிப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆசிரியர்கள் தம்பணிபுரிகின்றனர். குடும்பத்தினை கவனித்துக்கொண்டும் வீட்டுச்சுமைகளை தாங்கிக்கொண்டும் மாணவச்செல்வங்களை வளப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் ஆற்றும் பணி மெச்சுதற்கும் போற்றுதற்கும் உரியதே.

அறியக்கற்றல், செய்யக்கற்றல், வாழ்க்கற்றல், பிறருடன் இணைந்து வாழக்கற்றல் என்ற தன்மைகளில் பிள்ளைகளை வழிப்படுத்தவேண்டிய பொறுப்புக்குரியவர்களாகின்றனர். ஆசிரியர்கள். ‘புதிய அறிவுசார் சமூகத்தில் பாடசாலைப் பாடங்களை விட மாணவர்கள் பெறுகின்ற கல்வியைத் தொடரும் ஆற்றலும் கற்பதற்கான ஊக்கமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது’ என்று எதிர்காலவியல் மற்றும் முகாமைத்துவ சிந்தனையாளர் பீட்டர்  டிரக்கர் கூறுகின்றார். அந்த வகையில் பிள்ளைகளின் கல்விக்காய் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அனைத்து ஆசிரியப்பெருந்தகைகளுக்கும் இன்றைய நாளில் என் அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

செயலாளர், 

கல்வி அமைச்சு, வட மாகாணம்

Hits: 120