வடக்கு மாகாண அரச வெசாக் உற்சவம் 2025
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, வெலிஓயா பௌத்த பேரவை, வெலிஓயா பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச சபை, இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் பிரதேச அரச திணைக்களங்கள், பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண அரச வெசாக் உற்சவம் கடந்த 16.05.2025 அன்று மாலை 4.00 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள மகாவலி விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், வெலிஓயா பிரதேச செயலாளர் WDN சிறிபாலா மற்றும் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் (பதில்) சு.சுபாஸ்கரன், பிரதேச பௌத்த மதத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர்அதிகாரிகள், கலைஞர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏறத்தாழ நான்காயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதலில் மாலை 4.00 மணியளவில் வெசாக் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட பண்பாட்டுப் பேரணி வெலிஓயா பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமானது. பௌத்த பண்பாட்டினை பிரதிபலிக்கும் பல்வேறு கலைநிகழ்வுகள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்தப் பேரணி சம்பத்நுவர நகரில் அமைந்துள்ள பௌத்த சிலையை சென்றடைந்ததும் அங்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தர்மபோதனை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து மகாவலி விளையாட்டு மைதானத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வடக்கு மாகாண வெசாக் வலயம் மற்றும் தோரணவாயில் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் இருபத்து ஐந்திற்கும் அதிகமான வெசாக்கூடுகள் இந்த வலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. படையினர், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்பினர் எனப்பலரும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெசாக் கூடுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன் இந் நிகழ்வில் தேநீர், மல்லித்தண்ணீர், கடலை, றொட்டி, சோறு, கறி ஆகியவை “தன்சல” ஒழுங்கமைத்து வழங்கப்பட்டன. இத் தன்சலவில் அனைத்து மக்களும் பங்குபற்றினார்கள்.
தொடர்ந்து மேடை நிகழ்வுகள் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகின. இதில் நடன நிகழ்வுகள் 25 இற்கும் அதிகமான குழுவினரின் வெசாக் பக்தி கீதம் என்பன இடம்பெற்றதுடன் வெசாக்கூடு தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள், கலை நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன. இறுதியாக பிரதேச கலாசார உத்தியோகத்தர் WHM செனவிரட்ணவின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.