வட மாகாண இப்தார் நிகழ்வு – 2025
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 202.03.12ஆம் திகதி புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களும், மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் மன்னார் பிரதேச செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர், மடு வலயக்கல்வி பணிப்பாளர், சர்வமத தலைவர்கள் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் கல்வி வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், எருக்கலம்பிட்டி பிரதேச மௌலவிமார்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்தார் நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலை முன்றலில் இருந்து இஸ்லாமிய கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கிராஅத் ஓதப்பட்டது. பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட ஜம்மியத்துல் உலாமா தலைவர் அஷ் ஷேக் MACMM அஸ்லம் அவர்களின் நோன்புச் சிறப்புரை, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு செயலாளரின் தலைமையுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களது பிரதம விருந்தினர் உரை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரைகள் என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன.
நிகழ்வில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், மன்னார் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களின் ஹஸீதா, முசலி அல் பஸரிய்யா கலாமன்ற மாணவர்களது களிகம்பு நடனம், மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவர்களின் ஹஸீதா, மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவர்களின் களிகம்பு, வவுனியா சூடு வெந்த புலவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் ஹஸீதா போன்ற நிகழ்வுகள் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் மொஹமட் சாலிகு மொஹமட் அஸ்மி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது. நிறைவாக துஆ பிரார்த்தனையுடன் நோன்பு திறக்கப்பட்டு நிகழ்வானது 7.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

























